மதுரை: ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர், நாகராஜன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் இவர், மதுரை மாநகராட்சியின் துணை மேயராக உள்ளார். இந்நிலையில், நேற்று (ஜன.9) அவரது வீட்டின் முன்பு, மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு, திடீரென தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, துணை மேயர் நாகராஜன் மற்றும் அவரது மனைவி செல்வராணி ஆகியோர் வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியதோடு, வீட்டிற்கு உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். மேலும், ஜெய்ஹிந்த்புரம் முக்கிய சாலையில் உள்ள துணை மேயர் நாகராஜனின் அலுவலகத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி முற்றிலுமாக சேதப்படுத்தி உள்ளனர். இதனை அடுத்து, இச்சம்பவம் குறித்து ஜெய்ஹிந்த்புரம் காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், துணை மேயர் வீட்டு முன்பு வன்முறையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் லோகேஷ் (20) மற்றும் சீனி முகமது இஸ்மாயில் (20) என்பது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலை இதை செய்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்.. சவால் விட்ட எம்.பி.செந்தில்குமார்!
இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை மாநகர துணை மேயர் வீட்டு முன்பு தாக்குதலில் ஈடுபட்டதை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாகச் சென்று ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், காவல்துறையைக் கண்டித்து கோஷம் எழுப்பியதோடு, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதும், தாக்குதல் நடத்த தூண்டியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர்.
இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முக்கிய சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பான சூழலும் நிலவியது. அதனை அடுத்து, காவல் துறையினர் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் அடிப்படையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: விமானத்துக்குப் போட்டிப் போடும் ஆம்னி பேருந்து கட்டணம்.. பயணிகள் அவதி..!