கல்லூரிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2331 உதவி விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்தப் பணியிடத்திற்கு அக்டோபர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு நவம்பர் 15ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மேலும் அனைத்து விவரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணம் செலுத்தாத 804 விண்ணப்பதாரர்கள் மற்றும் பணி அனுபவ சான்று பதிவேற்றம் செய்திடாத 174 விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் அவர்களின் பணி அனுபவ சான்றிதழ் பதிவேற்றம் செய்திடவும், விண்ணப்ப கட்டணம் செலுத்தவும் டிசம்பர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ள கூடுதல் விவரங்கள் தேவைப்படுவதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும்( கல்வியியல் கல்லூரிகள் தவிர்த்து) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் கூடுதல் விவரங்களை 28ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைன் மூலம் தவறாது பதிவேற்றம் செய்திட வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்பதால் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுக் கொள்கிறது.