மதுரை: இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மூன்று ஆண்டுகளாக தாமதம் ஆவது குறித்து பிப்ரவரி 11ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை, விதி எண் 377இன் கீழ் எழுப்பி இருந்தேன்.
அதற்கு ஜூன் 23ஆம் தேதியிட்டு ஒன்றிய சுகாதார இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே பதில் (கடித எண் D. O. No. H-11016/05/2021- PMSSY - III) அனுப்பியுள்ளார்.
அசுவினி குமார் சௌபேயின் பதில் கடிதம்
டிசம்பர் 2018இல் மதுரை மாவட்டம் தோப்பூரில் ஆயிரத்து 264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் அமைக்கப்பட ஒன்றிய அமைச்சரவை முடிவெடுத்தது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) கடன் வாயிலாக திட்டத்தை அமலாக்க முடிவெடுக்கப்பட்டு அதற்கான முன் ஆயத்த ஆய்வு ஒன்று ஜைகா (JICA) குழுவால் பிப்ரவரி 2020இல் நடத்தப்பட்டது.
மதுரைக்கும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் மற்ற எய்ம்ஸ் மருத்துவ சேவைகளையும் நேரில் பார்வை இட்டார்கள். 150 படுக்கைகள் கொண்ட தொற்று நோய் பிரிவு ஒன்றையும் மற்றும் சில சேவைகளையும் திட்டத்தில் இணைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
'ஜைகா' கடன் உடன்பாடு
புதிய திருத்தப்பட்ட மதிப்பீடு 1977.80 கோடி ரூபாய் எனவும் அதில் 1627.70 கோடி ரூபாய் 'ஜைகா' கடன் வாயிலாகவும் மீதம் பட்ஜெட் ஒதுக்கீடு வாயிலாகவும் திட்டச் செலவினம் ஈடு செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த திருத்திய மதிப்பீடு அடிப்படையில் 26.03.2021 அன்று 'ஜைகா ' உடன் கடன் உடன்பாடு கையெழுத்தானது.
இதற்கிடையில் முதலீட்டுக்கு முந்தைய பணிகள் எய்ம்ஸ் அமைவிடத்தில் 90 விழுக்காடு முடிக்கப்பட்டுள்ளது. அதில் எல்லைச் சுவரும் அடக்கம். திட்டக் அமலாக்க குழுவிற்கான பதவிகள் உருவாக்கப்பட்டு மதுரை எய்ம்ஸ் க்கு நிர்வாக இயக்குநர், துணை இயக்குநர் ( நிர்வாகம்), கண்காணிப்பு பொறியாளர், நிர்வாக அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திட்ட நிர்வாக ஆலோசகரை (Project Management Consultant) நியமனம் செய்வதற்கான உலகளாவிய டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது.மதுரை எய்ம்ஸ் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற இயன்ற எல்லா முயற்சிகளையும் அமைச்சகம் மேற்கொள்ளும் என்ற உறுதி மொழியும் அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’அரண்மனைகள் சுற்றுலாத்தலமாக மாற்றப்படும்’- அமைச்சர் எ.வ.வேலு