மதுரை: கடந்த ஜன.9ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மதுரை இருப்புப் பாதை காவல் நிலையத்திற்கு மாநில காவல் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து, கோயம்புத்தூரில் இருந்து மதுரை வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக தகவல் கிடைத்தது.
அந்த தகவல் அடிப்படையில் குறிப்பிட்ட ரயில் மதுரை வந்ததும் வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை செய்யப்பட்டு, வெடிகுண்டு ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக மதுரை இருப்புப் பாதை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பொய்யாக தகவல் தெரிவித்தவர், பயன்படுத்திய செல்போன் அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்நிலையில் அந்த நபர் மதுரை மாவட்டம், மேலூர் அருகே வெள்ளளூரைச் சேர்ந்த சேகர் மகன் போஸ் (35) எனத் தெரிய வந்தது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் அதே ரயிலில் பயணம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னோடு அருகில் அமர்ந்து பயணம் செய்தவர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆகையால், அவர்களை போலீசில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவும், போலீஸ் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் இவ்வாறு ஒரு பொய்யான தகவலை அவசர போலீஸ் அழைப்பு எண் 100 மூலம் சொன்னது விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில் புரளி கிளப்பிய அந்த நபர், மேலூரில் வைத்து மதுரை இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் M. குருசாமி, உதவி ஆய்வாளர் முத்து முனியாண்டி மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.