திண்டுக்கல்: பழைய கரூர் சாலையில் அமைந்துள்ள நந்தவனப்பட்டியில் 2012ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனரான பசுபதி பாண்டியன் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் மூவர் இறந்துவிட்டனர். இதனால், மீதமுள்ள 15 பேர் மீதான வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளியான நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நிர்மலா தேவி (60) என்பவரை செப்டம்பர் 22 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டி இபி காலனி டேவிட் நகர் அருகே வைத்துக் கொலை செய்தனர்.
மேலும், அவரது தலையை வெட்டி எடுத்துச் சென்று பசுபதி பாண்டியனின் வீட்டின் முன்பு போட்டுவிட்டுச் சென்றனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன், ஆய்வு மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நிர்மலா தேவியை கொலை செய்த கும்பலை தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் சின்னாளப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையினர் அங்கு பதுங்கி இருந்த அய்யனார்(21), நடராஜன்(45), பூபாலன்(21) ஆகிய 3 பேரை கைது செய்து திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் நீதிபதி முன்பு முன்னிறுத்தினர். பின்னர் 3 பேரையும் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இந்த கொலை வழக்கில் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(33), மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கிலி கருப்பன்(28), செம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(22), அம்புலிப் பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த முத்துமணி(23), செம்பட்டி நாயுடு காலனியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டி(18) ஆகிய ஐந்து பேர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் நான்கில் சரணடைந்தனர்
இதையும் படிங்க: போலி காசோலை கொடுத்து 10 கோடி ரூபாய் மோசடி முயற்சி - 9 பேர் கைது