மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள பொய்கைகரைப்பட்டியினைச் சேர்ந்தவர் பாலுச்சாமி. இவர் இந்திய திபெத் எல்லை பாதுகாப்புப் படையில் கடந்த 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்காகச் சொந்த ஊர் வந்துவிட்டு, பிப்ரவரி 3ஆம் தேதி மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் அவர், பிப். 24ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு பெங்களூரிலிருந்து துணை ராணுவ வாகனத்தில் தரைமார்க்கமாக சொந்த ஊரான பொய்கைகரைப்பட்டி கிராமத்திற்கு இன்று (பிப்.26) கொண்டுவரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அன்பழகன், ராணுவ வீரரின் மனைவி ராமலட்சுமியிடம் ரூ. 20 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து, துணை ராணுவத்தின் கமாண்டர் பானு பிர தாப் சிங், ராஜேஸ் மீனா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் வீரரின் உடலை ராணுவத்தினரும், கிராம மக்களும் மயானத்திற்குச் சுமந்தே கொண்டு சென்றனர். மூவர்ண தேசியக் கொடி அவரது உடலில் போர்த்தப்பட்டு துணை ராணுவத்தினர் 13 பேர் வரிசையில் நின்று, 3 தடவை 39 குண்டுகளை வானத்தை நோக்கிச் சுட்டு மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: சென்னை பெரம்பூரில் மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பலி