மதுரை மாவட்ட ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையின் காவல் ஆய்வாளராக பணியாற்றியவர், பெருமாள் பாண்டியன். கடந்த 2010ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் புகார்தாரர் ஒருவருக்கு சாதகமாக வழக்கை முடித்து வைக்க சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக 2010ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆய்வாளர் பெருமாள் பாண்டியனுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அவருக்கு முகவராக செயல்பட்ட நமச்சிவாயம் என்பவருக்கு இரண்டு மாத சிறையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.