மதுரை: இந்த நூற்றாண்டின் விவேகமான நவீன மாற்றத்தால் அம்மி, ஆட்டு உரல், திருகை போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் இன்று காட்சிப் பொருட்களாகி விட்டன. அவற்றை எல்லாம் இன்றைய தலைமுறை வியந்து பார்க்கும் நிலை உருவாகிவிட்டது.
நவீன வசதி கொண்ட வீடுகள் கட்டப்படும்போதே சமையலறைகளில் அம்மி, உரல்களையும் கூட அமைத்துக் கொள்வதும் கூட தற்போது 'பேஷனாகி' விட்டது. ஆனால், அதனைப் பயன்படுத்துகிறார்களா என்பது கேள்விக்குறியே.
அம்மிக்கு மாற்றாக மிக்ஸியும், ஆட்டு உரலுக்கு மாற்றாக கிரைண்டரும், திருகைக்கு மாற்றாக உமி பிரிக்கும் எந்திரங்களும் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இதனால் மனிதர்களுக்கு உருவாகும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, உடற்பருமன் இயல்பாகி விட்டது.
இதையும் படிங்க: LIC: எல்ஐசி ஏஜென்ட்டின் வலையில் சிக்கிய பிரபல உணவக உரிமையாளர் - ரூ.2.50 கோடி மோசடி!
இந்த உடற்பருமனே பல்வேறு நோய்களின் நுழைவாயிலாக மாறிவிட்டதை மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றனர். இது ஒரு புறமிருக்க, மீண்டும் பழமைக்குத் திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தும் முயற்சிகளும் பழமை விரும்பிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னர் விவசாயம் சார்ந்த வாழ்வியலே இயல்பாக இருந்த நிலையில், தற்போது அனைத்திற்கும் இயந்திரங்களைச் சார்ந்த வாழ்க்கை முறையாக மாறிவிட்டது. இந்த நிலையில், மதுரை செல்லூர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவர் தனது குடும்பத்தின் சமையலுக்குத் தேவையான மசாலாவை வீட்டிற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள அம்மியில் அரைத்துக் கொள்கிறார்.
இந்த முதியவர் வேக வேகமாக அரைக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது அனைத்துக்கும் இயந்திரங்கள் வந்துவிட்ட நிலையிலும், இந்த முதியவர் மிகவும் உற்சாகத்துடன் அம்மிக்கல்லில் மசாலா அரைப்பது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதனைக் காட்சிப்படுத்திய சமூக ஆர்வலர் சங்கரபாண்டியனிடம் இது குறித்து கேட்டபோது, “எங்கள் பகுதியில் நடைபெறும் கோயில் திருவிழாவிற்காக பொதுமக்களிடம் நன்கொடை வசூல் செய்வதற்காகச் சென்று கொண்டிருந்தோம்.
அப்போது இந்த முதியவரின் இந்த செயல் எங்களை ஈர்த்தது. அவரிடம் பேச்சு கொடுத்தபோது, இது போன்றவை வாழ்வின் நிரந்தரம். மின்சார செலவில்லை, ரிப்பேர் செய்ய வேண்டியதில்லை. ஆனாலும் உடலுக்கு நல்ல உடற்பயிற்சி. இவையெல்லாம் நவீன இயந்திரங்களில் கிடைக்காது என்று அவர் சொல்வதுதான் உண்மை” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாம்பார் சாதத்தில் நெளிந்த புழு... வைரலாகும் வீடியோ!!