மத்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பாளரும் கீழடி அகழாய்வில் முதல் இரண்டு கட்ட அகழாய்விற்குத் தலைமை வகித்தவருமான அமர்நாத் ராமகிருஷ்ணா ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார். அப்போது பேசிய அவர், 'மத்திய தொல்லியல் துறையின் அசாம் வட்டத்தில் பொறுப்பு அதிகாரியாக எனது பணிகளை மேற்கொண்டு வருகிறேன். பராமரிப்புப் பணிகளில்தான் நான் நியமிக்கப்பட்டுள்ளேன். ஆகையால் பணி நிமித்தம் எந்தவித சிக்கலுமில்லை. தமிழ்நாட்டில் இதுவரை விரிவான அகழாய்வுகள் நடைபெறவில்லை. அக்குறையைப் போக்கும் வண்ணமாகத்தான் எனது தலைமையிலான சிறிய அணி ஒன்று, கடந்த 2014ஆம் ஆண்டு கீழடியில் களமிறங்கியது. தற்போது வரை அது தொடர்கிறது என்பது மகிழ்ச்சி தான்.
வைகை நதி நாகரிகம் என்ற தலைப்பிலான இந்த ஆய்வில்தான் கடந்த 2013ஆம் ஆண்டு வைகையின் இருபுறமும் உள்ள பழமையான 293 இடங்களைப் பட்டியல் செய்து, அதில் ஓரிடமாகத்தான் கீழடியைத் தோண்டினோம். இது ஒரு தொடக்கம்தான் என்றாலும் கூட, கீழடி அகழாய்வுப் பணி விரிவடைய வேண்டும். மொத்தமுள்ள 110 ஏக்கர் நிலப்பரப்பில் பத்து சதவிகிதத்தில் கூட ஆய்வுப் பணிகள் நிறைவடையவில்லை.
தமிழர் வரலாற்றை மறுகட்டமைப்பு செய்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் கீழடி நிலப்பரப்பில் உண்டு. கடந்த 4ஆம் கட்ட அகழாய்வு வரை கிமு 300-ஆக இருந்த காலம் மாறி, தற்போது மேலும் முன்னேறி தற்போது கிமு 600-ஆக மாறியுள்ளது. மேலும் ஆய்வுகள் விரிவடைய வேண்டும். அப்போதுதான் பல்வேறு ஆதாரங்கள் கிடைக்கும். அவற்றை ஒப்பீடு செய்வதன் மூலம் வரலாறு மீள் கட்டமைப்புக்கு உள்ளாகும்' என்றார்.
தமிழக அரசு வருங்காலத்தில் முன்னெடுக்கவுள்ள அகழாய்வுப் பணிகளில் இந்திய தொல்லியல் துறை என்ன மாதிரியான பங்களிப்புகளை வழங்கும் என்பது குறித்த கேள்விக்கு, 'இது போன்ற அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையால் மட்டுமே செய்துவிட முடியாது. இந்திய தொல்லியல்துறையின் தொழில்நுட்பம் சார்ந்த விசயங்களையும், அனுபவம் அதிகமுள்ள வல்லுநர்களையும் பயன்படுத்த வேண்டும். வடஇந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட விரிவான அகழாய்வுகளைப் போன்று தமிழகத்திலும் தொடர்ந்து நடைபெற வேண்டும்’ என்றார்.
கீழடியில் நடைபெறவுள்ள 6-ஆம் கட்ட அகழாய்வில் மத்திய தொல்லியல் துறை பங்கேற்க வாய்ப்புண்டா என்பது குறித்த கேள்விக்கு, 'மத்திய தொல்லியல்துறை பங்கேற்குமா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆறாம் கட்ட அகழாய்வுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கேட்டுள்ளனர். கண்டிப்பாக அனுமதி வழங்கப்படும் என நம்புகிறேன். ஆகையால், இந்த அகழாய்வையும் தமிழ்நாடு அரசு விரிவாக செய்யும். அண்மைக் காலங்களில் தமிழ்நாடு அரசு மிக விரிவான அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அது தடையின்றித் தொடரும் என்பதுதான் எனது நம்பிக்கை. அப்போதுதான் விரிவாகவும், விரைவாகவும் முடிவுகளை கொண்டு வர இயலும்’ என்றார்.
முதல் மூன்று கட்ட அகழாய்வு குறித்த அறிக்கை மத்திய தொல்லியல்துறையிடமிருந்து பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, 'முதல் இரண்டு கட்டமாக நடைபெற்ற அகழாய்வுகளின் இடைக்கால அறிக்கையை கடந்த 2017ஆம் ஆண்டே மத்திய தொல்லியல் துறைக்கு வழங்கிவிட்டேன். இதனை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழக தொல்லியல் துறை தற்போது இடைக்கால அறிக்கை ஒன்றை பொதுவெளியில் பகிர்ந்துள்ளனர். இது குறித்து தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், நான் வழங்கிய இடைக்கால அறிக்கை குறித்துப் பதிவு செய்துள்ளார். முழு அறிக்கை வெளியாவதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. கிடைத்த பொருள்கள் அனைத்தையும் துல்லியமாக அலசி ஆராய்ந்துதான் தயாரிக்க முடியும். முழுமையான ஆய்வறிக்கைத் தயார் செய்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மத்திய தொல்லியல் துறையிடம் நான் வழங்கிய இடைக்கால அறிக்கையை அவர்கள் நினைத்தால் வெளியிடலாம். அதில் எந்தத் தடையுமில்லை. அந்த அறிக்கையின் நகலை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியிருக்கிறார்கள்' என்றார்.
கீழடி தமிழ் நாகரிகமா..? திராவிட நாகரிகமா..? அல்லது பாரத நாகரிகமா..? என்று எழுகின்ற சர்ச்சைகள் குறித்த கேள்விக்கு, 'சங்க காலத் தமிழர் நாகரிம் தான். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். தமிழ்மொழி என்பது திராவிட இனத்தின் தாய். தமிழிலிருந்து பிற அனைத்து மொழிகளும் உருவாயின. அம்மொழிகளின் பரவலே திராவிட இனமாக உருவெடுத்துள்ளது என்றுதான் பார்க்க வேண்டும். இதனை சர்ச்சையாக்க வேண்டிய அவசியமில்லை. கீழடியை சங்க கால நாகரிகமாகத்தான் ஆய்வு செய்ய வேண்டும் என்பதே எனது கருத்தாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், 'நான் தமிழ்நாட்டில் பணியாற்ற வேண்டும் என்ற பொதுமக்களின் விருப்பம் இந்திய தொல்லியல் துறை உயரதிகாரிகளின் கையில்தான் உள்ளது. கீழடியில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு, இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. வாய்ப்புக் கிடைத்தால் உறுதியாக கீழடியில் பணியாற்றுவேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கீழடி மட்டுமல்ல, அதேபோன்று மிகப் பழமையான இடங்கள் நிறைய உள்ளன. வைகை நதிக்கரை மட்டுமன்றி காவிரி, தாமிரபரணி, தென்பெண்ணை, பாலாறு போன்ற நதிக்கரைகளிலும் தொன்மைமிக்க சிறப்பு இடங்கள் உள்ளன. ஆகையால் நிச்சயம் அந்த வாய்ப்புக் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறேன்' என்றார்.
இதையும் படிங்க: கீழடியைப் பார்வையிடும் நாள்களை நீட்டிக்க வேண்டும்’ - பொதுமக்கள்