ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள பிரிஸ்பேன் நகரில் சிறப்பு மாணவர்களுக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மதுரையைச் சேர்ந்த ஆறு சிறப்பு மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இந்த மாணவர்களுக்கு நிதி வசதியின்மை காரணமாக தற்போது பங்கேற்க இயலாத சூழ்நிலை உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் உதவி செய்ய வேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து பெத்சான் சிறப்பு பள்ளியின் விளையாட்டு பயிற்சியாளர் ஐசக் கூறுகையில், "வருகின்ற அக்டோபர் 12ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை ஐ.என்.ஏ.எஸ். 'குளோபல் கேம்ஸ் 2019' ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான வீரர்களை இந்திய அளவில் தேர்வு செய்யும் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பாக 13 வீரர், வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர்.
இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஏழு பேர் பங்கேற்கின்றனர். குறிப்பாக மதுரை பெத்சான் சிறப்புப் பள்ளி, அக்ஷயா சிறப்புப் பள்ளியிலிருந்து ஐந்து மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்கள் கடந்த கடந்த ஓராண்டாக பல்வேறு பயிற்களை மேற்கொண்டுவருகின்றனர். இந்தப் போட்டிகளில் நமது வீரர்கள் நிச்சயமாக பதக்கங்கள் வெல்ல அதிக வாய்ப்புகள் உண்டு" என்றார்.
மேலும் மாணவர் தினேஷ் என்பவரின் தந்தை பாஸ்கரன் கூறுகையில், "மிகவும் ஏழ்மையான அடித்தட்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். மிதிவண்டி ஓட்டுவதில் தினேஷுக்கு இருக்கும் திறமையை கண்டறிந்த பின்பு ஏறக்குறைய ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில், அவருக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்து இருக்கிறோம்.
இதற்கு முன்பாக ஒரு சில வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்க செல்லும்போது கடுமையான பண நெருக்கடியோடுதான் அனுப்பிவைத்தோம். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. அவ்வளவு தொகை கொடுப்பதற்கு எங்களிடம் வசதி இல்லை, இதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும்" என்றார்.