மதுரை ஆரப்பாளையம் அருகே ஆட்டோ தொழிலாளர் சங்கமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நிகழ்வை தொடங்கிவைத்த மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், தமிழ்நாட்டில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு மாணவர்கள் வேறு மாநில மையங்களுக்கு தேர்வு எழுத செல்லாதவாறு மையங்கள் அமைக்க அரசு உரிய தேர்வு விதிகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரங்களில் வெளி மாநிலத்திற்கு சென்று தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கைவைத்தார்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது குறித்து உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது என்றும் நாடாளுமன்றத்தில் அதற்கான மசோதா தாக்கல் செய்யும் போது தகுந்த முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ரஃபேல் போர் விமானங்களுக்கு பூஜை செய்தது குறித்து பேசிய அவர், மதச் சடங்குகள் ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை. ஆனால், மக்களுக்கான அரசு சமய சார்பற்றதாக இருக்கவேண்டும் எனக் கூறினார்.
இதையும் படிக்க:நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: ஜாமீன் கேட்டு மனுதாக்கல்