உலகப் புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா, இந்த ஆண்டு மதுரையில் மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19-ம் தேதியன்று அதிகாலை வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர், அங்கிருந்து புறப்பட்டு வண்டியூரிலுள்ள வீரராகவப் பெருமாள் கோவிலில் இரவு தங்கினார்.
நேற்று காலை (ஏப்.20) கள்ளழகருக்கு ஏகாந்த சேவையும், சந்தன அலங்காரமும் நடைபெற்றது. பிறகு அங்கிருந்து சேஷ வாகனத்தில் வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபம் வந்தடைந்தார்.
இந்நிலையில் தேனூர் மண்டபத்தில்தான் ஒவ்வொரு ஆண்டும் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அதாவது, புராண கூற்றுப்படி திருமாலிருஞ்சோலையிலுள்ள நூபுர கங்கையில் பெருமாளை வணங்கித் தவமிருக்கிறார் சுதபஸ் எனும் முனிவர்.
அப்போது துர்வாச முனிவர் தனது சீடர்களோடு நூபுரகங்கையில் குளிப்பதற்காக வருகை தரும்போது, அதனை அறியாமல் தொடர்ந்து தவத்தில் ஆழ்ந்திருக்கும் சுதபஸ் முனிவர் மீது கோபம் கொண்டு, துர்வாசர் அவரை தவளையாகப் போகும்படி சாபம் அளிக்கிறார். இந்த சாபத்திலிருந்து சுதபஸ் முனிவரை காப்பாற்றும் பொருட்டு விமோசனம் தருவதற்காகவே, கள்ளழகர் மதுரைக்கு வருகை தருகிறார்.
அதன்படி மதுரைக்கு அருகேயுள்ள வண்டியூர் வைகையாற்றின் தேனூர் மண்டபத்தில் இந்த விமோசன நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதேபோன்று நாரைக்கு முக்தியளிக்கும் நிகழ்வும் நடைபெறுகின்ற காரணத்தால், ஒவ்வொரு ஆண்டும் நாரையைக் கொண்டு வந்து கட்டி வைத்து, பட்டர் அம்பு விடும்போது பறக்க விடுவது வழக்கமாக இருந்து வரும் முக்கியக் நிகழ்வாகும்.
இந்த முறை கொக்கு பிடிக்கு முடியாததால், அவசர கோலத்தில் மதுரை திலகர் திடல் அருகேயுள்ள ஞாயிற்றுக்கிழமை சந்தையில் வாங்கி வரப்பட்ட புறாவைக் கட்டி, கொக்குக்கு மோட்சம் தருவதுபோல் அந்நிகழ்வை நிறைவு செய்தனர்.