மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு பைசாகூட செலவு செய்ய இயலாது என்ற கே.எஸ். அழகிரி பேசியது குறித்த கேள்விக்கு, அவரிடம் காசு இருப்பது குறித்து நம்மால் கூற இயலாது என்றும், ஏன் அவ்வாறு கூறினார் என்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் எனவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான சூழல் ஏற்படவில்லை என்று திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு, அவர் தேவைப்பட்டால் எதிர்ப்பு, தேவையில்லை என்றால் ஏற்பு என்ற முரண்பாடுடைய கருத்தியல் நிலைப்பாடு கொண்டவர் என்றும், இதற்கு திருமா தான் விளக்கம் கொடுக்க வேண்டும் எனவும் பதிலளித்தார்.
மேலும், டெங்கு காய்ச்சல் தமிழ்நாட்டில் பரவலாக இருந்து வருவது குறித்த கேள்விக்கு, டெங்கு காய்ச்சலை பொருத்தவரையில் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருவதாக கருத்துக்கள் நிலவிவருகிறது. அதற்கான புள்ளி விவரம் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை, இருந்த போதிலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், அதனை ஒழிக்கவும் முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நிச்சயமாக டெங்குகாய்ச்சல் தடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க:
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு