மதுரை மாவட்டத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா அரசு அலுவலர்களின் துணையுடன் திமுக சட்டப்பேரவை தொகுதிகளில் கொண்டுவரப்படும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது மரபு மீறிய செயல் என்று கூறி மதுரை வடக்கு தெற்கு மாவட்ட திமுகவினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து திமுக எம்எல்ஏக்கள் சரவணன் மற்றும் மூர்த்தி ஆகியோர் இணைந்து அளித்த பேட்டியில்," மதுரை மாவட்டத்தில் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பாக சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் ராஜன்செல்லப்பா.
இவர் அரசு அலுவலர்களுடன் சேர்ந்து கொண்டு திமுக சட்டப்பேரவை தொகுதிகளான திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை கிழக்கு தொகுதிகளில் அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதும், அடிக்கல் நாட்டுவதும், பெயர்பலகை வைப்பதும் என முறைகேடான செயல்களை தொடர்ந்து செய்துவருகிறார்.
அவரது இந்தச் செயலுக்கு அரசு அலுவலர்களும் உடந்தையாக செயல்படுகின்றனர். எனவே இதுகுறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பி.மூர்த்தி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் திருப்பரங்குன்றம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் புகார் மனு அளித்தோம். இதுகுறித்து ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக தலைவரிடம் அனுமதி பெற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்" என எச்சரித்தனர்.