மதுரை: அரியமங்கலத்தைச் சேர்ந்த சோழசூரர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னதாக
அவர் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில்,
"நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பணி இடங்களில் வடஇந்தியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். குறிப்பாக, ரயில்வே பணிமனையில் 1,765 நபர்களுக்காக வழங்கபட்ட அப்ரண்டீஸ் பயிற்சியில் 1600 பேர் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியாகியிருந்தது".
இவ்வாறு, பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அப்பகுதியைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
ஆகவே, தமிழ்நாட்டிலும் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் விதமாக சட்டம் அல்லது அரசாணையைப் பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
நீதிபதிகள் கேள்வி
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், குறிப்பிட்ட மாநிலத்தினருக்கு பணியில் முன்னுரிமை எனக்கூறுவது சட்டவிரோதம் ஆகாதா? எனக் கேள்வி எழுப்பினர்.
மனுதாரர் தரப்பில் பல மாநிலங்களில் இதுபோல அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்" எனக் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கினை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஆசிரியர் குணமடைய மாணவர்கள் கூட்டு பிராத்தனை; சிகிச்சைக்கு உதவிட முதலமைச்சருக்கு கோரிக்கை!