மதுரை: மதுரையை தலைமையிடமாகக் கொண்டு நியோ மேக்ஸ் ப்ராபர்ட்டீஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்நிறுவனம் பொதுமக்களிடம் ஆசை வார்த்தைக் கூறி பல்லாயிரம் கோடி பணத்தை முதலீடாக பெற்றதாகவும், பொது மக்களிடம் உறுதியளித்தபடி அவர்களுக்கு உரிய தொகையை திருப்பி அளிக்கவில்லை என்றும் முதலீட்டாளர்கள் பலர், நியோ மேக்ஸ் உள்ளிட்ட துணை நிறுவனங்கள் மீது போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நியோ மெக்ஸ் இயக்குனர்கள் உட்பட சிலர் கைதாகி உள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ள தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த நாராயணசாமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “நியோ மேக்ஸ் நிதி நிறுவனம் முதலீடு தொடர்பான விவகாரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்ததற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் 70 வயதுடைய இருதய நோயாளி. எனக்கு முன் ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று (அக்.31) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்பு நிதி ஆஜராகி, “நியோ மேக்ஸ் நிதி மோசடியில் 157 நிறுவனங்கள் செயல்பட்டு உள்ளன. இதில் 88 நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. 577 புகார்கள் பெறப்பட்டு உள்ளன.
இந்த புகாரில் அடிப்படையில் மட்டுமே நிதி 108 கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது. 32 ஆயிரம் முதலீட்டாளர்கள் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்து உள்ளதாக, நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுதாரரும் அந்த நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்” என தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, இவர் இயக்குனர் என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு கேட்டார். ஆனால் பொருளாதார குற்றவியல் போலீசார் ஆவணங்களை கொண்டு வரவில்லை எனக் கூறி, தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டனர். இதையடுத்து அந்த ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதியில் தரமற்ற தார் சாலை.. புலம்பும் பகுதிவாசிகள்!