மதுரை: கரூர் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த பர்வதம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,"நான் கணிதத்துறை மற்றும் கல்வியியல் துறையில் பட்டமும் பெற்றுள்ளேன். 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.
தேர்வுமுறை தொடர்பாக பல்வேறு வழக்குகள் தாக்கலான நிலையில், தமிழ்நாடு அரசு கடந்த 2018 ஜூலை 20ஆம் தேதி போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு நடைபெறும் என அதுதொடர்பான அரசாணை ஒன்றை வெளியிட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும், வெயிட்டேஜ் முறையால் 0.25 மதிப்பெண்களில் எனக்கான பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்புவதற்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதற்கு, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்ததன் அடிப்படையில், தற்காலிக ஆசிரியர் தேர்வுக்கு பல வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், அதில் இடஒதுக்கீடு, முன்னுரிமை தொடர்பாக முறையான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. இதனால் கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்ற பலர் பணியமர்த்தப்படவில்லை. அதுபோன்று முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
ஆகவே இடஒதுக்கீடு, முன்னுரிமை போன்றவை குறித்து முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்தும், அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை தொடர இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகர் முன்பு நேற்று (ஜூலை 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், "இதே வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்விலும், இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நீட் முறைகேடுகளை தவிர்க்க வழிமுறைகள் என்ன? - சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு