மதுரை: இயக்குநர் பா. ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "ஜூன் 5-ஆம் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக, அதன் நிறுவனர் டி.எம். மணி என்ற உமர் பாருக்கின் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன். நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் 'செந்தமிழ் நாட்டு சேரிகள்' எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசினேன்.
பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகளும் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கற்காலம் என குறிப்பிட்டுள்ளனர். தேவதாசி முறை அவரது ஆட்சிக் காலத்தில் அதிகளவில் இருந்துள்ளது.
பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் குறிப்பிட்டேன். இந்த தகவலை வேறு பலரும் பேசி உள்ளனர். ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது.
நான் உள்நோக்கத்துடன் எந்தக் கருத்தையும் பதிவு செய்யவில்லை. மேலும் எனது கருத்து எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. ஆகவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் பா.ரஞ்சித் மீதான வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பாக இன்று (செப்.1) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கினை இறுதி விசாரணைக்காக செப்டம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியல் செப்டம்பர் 14ஆம் தேதி வெளியீடு!