மதுரை: தமிழ்நாட்டில் சிறைவாசிகளின் நலன் கருதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தண்டனைக் காலங்களில் அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்பித்து, வாழ்க்கையில் மேம்பட பல்வேறு செயல்களை முன்னெடுத்துள்ளது. மத்திய சிறைகளில் கைதிகளுக்கான நவீன நேர்காணல் அறை, பல்வேறு வசதிகளுடன் கூடிய நூலகம் ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிறைவாசிகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், சிறை நூலகத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டம் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் தன்னம்பிக்கையை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை மத்திய சிறையில் ஆடியோ, வீடியோவுடன் நற்கருத்துகளை ஒளிபரப்பும், டிஜிட்டல் நூலகமும் தொடங்கப்பட்டுள்ளது.
சிறைவாசிகள் அவர்கள் இருக்கும் அறையிலேயே வீடியோ, ஆடியோ மூலம் ஒரு புத்தகம் குறித்த விளக்கத்தைப் பெற முடியும். இதனால் ஒரு முழு புத்தகத்தைப் படித்த அனுபவம் அவர்களுக்கு கிடைக்கும் என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள நூலகத்திற்கு ஒரு லட்சம் புத்தகங்களை திரட்டும் முயற்சியில் சிறை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நூல்களை பெறுவதற்காகப் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்களையும் நடத்தி வருகிறது. சிறைக் கைதிகளின் நலனை கருத்தில் கொண்டு முக்கியப் பிரமுகர்கள் பலர் மதுரை மத்திய சிறையில் நூலகத்திற்குப் பல்வேறு வகையான நூல்களை நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதுரை மத்திய சிறைச்சாலைக்கு சென்ற நடிகர் விஜய் சேதுபதி, சிறைவாசிகள் பயன்பெறும் வகையில் ஆயிரம் புத்தகங்களை தனது அன்பளிப்பாக வழங்கினார். அந்த புத்தகங்களை சிறைத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.