மதுரை: இந்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள தென்னிந்திய கோவில்கள் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பாளராக அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமர்நாத் ராமகிருஷ்ணன் என்ற இந்தப் பெயரை தமிழர்கள் ஒருபோதும் மறக்க இயலாது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்டங்களை இந்திய தொல்லியல் துறையின் சார்பாக நடத்தியதுடன், தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்ததில் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.
![தென்னிந்திய கோவில்கள் ஆய்வுத் துறையில் அமர்நாத் ராமகிருஷ்ணன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-01-archaelogy-amarnath-charge-script-7208110_04102021220105_0410f_1633365065_232.jpg)
கீழடியில் தான் மேற்கொண்ட இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகளையும் முழுவதுமாக மக்கள்மயப்படுத்தி, அதன் பெருமைகளை உலகமெலாம் கொண்டு செல்ல அரும்பாடுபட்டவர். பல்வேறு காரணங்களுக்காக இந்திய தொல்லியல் துறை அவரை அஸாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்தது. அங்கிருந்து கோவாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அங்கு தனது பணியை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், இந்திய தொல்லியல்துறை சென்னை தொல்லியல் சர்க்கிளில் உள்ள தென்னிந்திய கோவில்கள் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பணிபுரியும் வாய்ப்பு அமர்நாத் ராமகிருஷ்ணனுக்குக் கிடைத்துள்ளது.
சென்னையில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் தென்னிந்திய கோயில்கள் ஆய்வு பிரிவின் தொல்லியல் கண்காணிப்பாளராக அமர்நாத் ராமகிருஷ்ணன் நேற்று (அக்-4) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க: பெட்ரோல் விலையை 35 ரூபாயாக குறைக்க மத்திய அரசு தயார் - அண்ணாமலை