பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த தலைவருமான மறைந்த ஆண்டித் தேவரின் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஆண்டித் தேவரின் இல்லத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, அதிமுகவின் தேனி வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், மதுரை வேட்பாளர் ராஜ் சத்யன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய தொகுதியில் போட்டியிடாமல் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸைச் சேர்ந்த இளங்கோவன் தேனி மக்களுக்காக எந்த ஒரு பிரச்னையிலும் குரல் எழுப்பவில்லை. அதிமுக சார்பில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ரவீந்திரநாத்தின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒருமையில் திட்டிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிமுகவால் தோற்கடிக்கப்படுவார்" என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய தேனி தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் கூறுகையில், "தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக கட்சி வேட்பாளர்களும் முன்னணி வேட்பாளர்களும் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம். மறைந்த ஜெயலலிதாவின் கனவை நினைவாக்குவோம். ஜெயலலிதாவின் புகழை பரப்பி வாக்கு சேகரிப்போம்" என்றார்.