மதுரை: பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ளது மேலவாசல். இது பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியாகும். மதுரை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்களாக இங்குள்ள ஆண்களும் பெண்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவியரில் இதுவரை யாரும் சட்டப்படிப்பு பயிலாத நிலையில், ஆறுமுகம்-சுந்தரி தம்பதியரின் மகளான துர்கா என்பவர் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனதுடன் பார் கவுன்சிலிலும் தன்னை பதிவு செய்துள்ளார். இவரது கணவர் பிரசாத் ஆவார்.
இந்நிலையில் வழக்கறிஞராகப் பயின்று பட்டம் பெற்ற அவர், சென்னையிலிருந்து மதுரைக்கு ரயில் மூலம் நேற்று (டிச. 27) வருகை தந்தார். இதனையெட்டி மேலவாசல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் துர்காவுக்கு மேளதாளங்கள் முழங்க, சால்வை, மாலைகள் அணிவித்து குதிரை மீது அமரவைத்து, பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மேலவாசல் வரை தங்கள் பகுதிக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
துர்காவும் அப்பகுதியிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தங்கள் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் முதன் முதலாக சட்டம் பயின்று வழக்கறிஞராகத் திரும்பியதை மேலவாசல் பட்டியலின மக்கள் கொண்டாட்டத்துடன் வரவேற்றது பெரிதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு ஒட்டுமொத்த வளர்ச்சியை அதிகரிக்கும் - திரௌபதி முர்மு