மதுரை: தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை (பிப். 18) மதுரை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலம் மதுரை வந்த குடியரசுத் தலைவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், டிஜிபி சைலேந்திர பாபு, மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட அவர், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தடைந்தார். அப்போது கோயில் சிவாச்சாரியர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, கொடிமரம் ஆகிய இடங்களில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தரிசனம் செய்தார். தொடர்ந்து அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தினார்.
இதையடுத்து அங்குள்ள வருகை பதிவேட்டில், "பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு வந்ததில் மகிழ்ச்சி. பிரம்மாண்ட கோபுரங்கள், கலைநயமிக்க சிற்பங்கள், கட்டடக்கலை ஆகியவை அற்புதமான அனுபவத்தை தருகின்றன. தேச நலனுக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் இறைவனை வேண்டியுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் மதுரையில் இருந்து கோவைக்கு புறப்பட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்குள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வீடியோ: மகாசிவராத்திரியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு