மதுரை: மதுரை மாநகராட்சி திமுகவின் பெண் மேயராக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளரான இந்திராணி தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து, அக்கட்சியில் நாள்தோறும் பிரச்சினை அதிகரித்துக்கொண்டே வருவதாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்தின் உச்சபட்சமாகக் கடந்த மாமன்ற கூட்டத் தொடரில் திமுக மாமன்ற உறுப்பினர்களுக்கான குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஜெயராமன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மேயர் தங்களிடம் ஆலோசனை நடத்துவதில்லை எனக்கூறி மாமன்ற கூட்டத்திலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்து மேயரை முற்றுகையிட்டனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று ( ஏப்.12 ) மதுரை வடக்கு மண்டல அலுவலகத்தில் மேயர் இந்திராணி தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருகை தந்த 35 ஆவது வார்டு உறுப்பினர் ஜானகி தனது வார்டு பகுதிகளில் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளதாகக் கூறியுள்ளார். அப்போது மேயர் இந்திராணி 'மரியாதை கொடுக்காதவர்களுக்கு எதுக்கு வேலை பாக்கனும்' என்று பேசியதாகக் தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக பெண் மாமன்ற உறுப்பினர் ஜானகி இது போன்று மேயர் பழிவாங்கும் நடவடிக்கை போன்று பேசுவதற்கு நேருக்கு நேராக எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி சமாதானப்படுத்திய நிலையிலும் மாமன்ற உறுப்பினர் ஜானகி மேயரிடம் வாக்குவாதம் செய்தார். "தங்கள் பகுதிக்கு பணிகள் குறித்து கேட்டால் மரியாதை குடுக்கல பார்க்க முடியாது என சொல்வது ஏற்புடையதல்ல" என முறையிட்டார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அரசு பேருந்தில் பெண் போலீசிடம் சில்மிஷம்.. முன்னாள் ராணுவ வீரர் கைது!