மதுரை: தத்தனேரி பகுதியில் சிக்னலுக்காகக் காத்திருந்த அமிர்தா ரயிலில் சில அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென சந்தேகப்படும்படி ஏறியதைக் கண்ட திண்டுக்கல்லைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களான கோபிநாத் மற்றும் டேவிட்ராஜா ஆகியோர் அவர்களைத் தட்டிக் கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் ஊழியர்களைத் தாக்கி, அவர்களிடமிடருந்து செல்போன் மற்றும் 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்து விட்டு தப்பியோடியுள்ளனர்.
கொள்ளையர்கள் கைது:
இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து மதுரை ரயில்வே காவல் துறையினருக்குப் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து டிஎஸ்பி பொன்னுசாமி உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் அருணோதயம், தலைமை காவலர் செல்லப்பாண்டி, விஜயராஜா, செல்வகணேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், ரயில்வே ஊழியர்களைத் தாக்கி, செல்போன் மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டது மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது அர்சத்(வயது 23), ஆஷிக் (வயது 22), ஷாருக்கான் (வயது22) மற்றும் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது 22) என்பது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து நால்வரையும் கைது செய்த தனிப்படை காவல்துறையினர் அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.