மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வருகின்ற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. துரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ, மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, மேலூர் எம்எல்ஏ பெரியபுல்லான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, "ஆ ராசாவின் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவரிடம் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். இறந்தவர்களை பற்றி தரம்தாழ்த்தி பேசுபவர் கேடுகெட்ட அரசியல்வாதியாக ஆ.ராசா செயல்பட்டு வருகிறார்.
திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தொண்டனை நாய் என்று அவதூறாக பேசினார். கேடுகெட்ட அரசியல்வாதிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்றார். அப்போது செய்தியாளர்கள் செல்லூர் ராஜூவிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
தமிழ்நாட்டை மீட்டெடுப்போம் கமலஹாசன் பயணம்: ஜனநாயகத்தில் எல்லோரும் ஓட்டு கேட்டு வரலாம், கமல் ஹாசன் வந்தால் கூட்டம் கூடும் ஓட்டு வருமா என்பதுதான் கேள்விக்குறி.
தேமுதிக 234 தொகுதியிலும் போட்டி: தேமுதிக கட்சியின் திறமையை காண்பிப்பதற்காக பிரேமலதா விஜயகாந்த் பேசுகிறார். ஒவ்வொரு கட்சியும் சொல்கிறது நான் முதலமைச்சர் என்று, அமைப்பு ரீதியாக உருவான கட்சி தேமுதிக அவர்கள் சொல்வது தவறில்லை என பதிலளித்தார்.
2021 ஆம் ஆண்டு தேர்தல் நிலவரம்: 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். இளைஞர்களுக்கு 2021 பெரிய அளவில் அதிமுகவில் அடையாளம் காட்டப்பட்டு பெரிய பொறுப்புகள் கிடைக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
இதையும் படிங்க: பாரம்பரிய காளைகளை அழிக்க சட்டம் கொண்டுவந்துள்ள அதிமுக: கார்த்திகேய சிவசேனாதிபதி