மதுரை: தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தின் நுண் கலைத்துறை, அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் காந்தி நினைவு அருங்காட்சியகம் (Gandhi Memorial Museum) ஆகியவை இணைந்து நுண் கலைத்துறை மாணவ மாணவியரின் நவீன ஓவியக் கண்காட்சி (A modern painting exhibition) அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.
இந்த கண்காட்சி வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுமக்களின் பார்வைக்காக நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இதில், இடம் பெற்றுள்ள பல்வேறு வகையான ஓவியங்கள் பார்வையாளர்களின் கண்ணைக் கவரும் வகையில் மிகவும் நேர்த்தியாக உள்ளன. இதுகுறித்து நுண் கலைத்துறையில் 4ஆம் ஆண்டு பயிலும் மாணவி தர்ஷினி நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறுகையில், 'அழகப்பா பல்கலைக்கழகத்தின் நுண் கலைத்துறை சார்பில் 6 நாட்கள் நடைபெறுகின்றன. இதில் எங்கள் துறை மாணவ மாணவியர் 24 பேர் வரைந்த நவீன ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
மாணவ மாணவியரின் திறமையைப் பறைசாற்றும் ஓவியங்களாக மட்டுமன்றி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காற்று, ஒலி மாசுகள், பெண்ணியம், பெண்கள் முன்னேற்றம், உலகப் போர்கள், பழமை மரபுகள், நவீன உலகின் மற்றொரு பக்கம் என பல்வேறு கருத்தமைவுகளில் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக, பெண்ணின் மாதவிடாய் குறித்த பொதுப்புரிதலை மாற்றும் வகையில், அதன் புனிதம் குறித்த ஓவியமும் இங்கே இடம் பெற்றுள்ளன. இதனைப் பொதுமக்கள் மிகவும் விரும்பி ரசித்துச் செல்வதோடு, அதற்கான விளக்கங்களையும் கேட்பது படைப்பு துறை சார்ந்த மாணவர்களாகிய எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது' என்றார்.
இந்த கண்காட்சியில் மாணவி தர்ஷினி உட்பட மாணவர்கள் சந்தோஷ்குமார், மனோஜ்குமார் மற்றும் சேஷன் ஆகியோர் வருகின்ற பொதுமக்கள், மாணவ மாணவியருக்கு ஓவியங்கள் குறித்து விளக்கமளித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மீ.மருது பாண்டியன், அழகப்பா பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் முனைவர் செந்தமிழ்ப்பாவை ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
உலகமயமாக்கலில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த நவீன உலகில், மனிதனை சற்று நிற்க வைத்து திரும்பிப் பார்க்க வைக்கும் இந்த மாதிரியான ஓவியங்கள் வெறும் மாணவர்களின் அழகு நிறைந்த வேலைப்பாடுகள் நிறைந்த கைவண்ணம் மட்டுமில்லை. இவை மனித நாகரீகத்தின் மறைந்துவிட்ட பண்பாட்டையும், மாற்றம் காண வேண்டிய சமத்துவம் நிறைந்த மனித நாகரீகத்தின் அவசியத்தினை நினைவுபடுத்தி அவற்றை எதிர்காலத்திற்கும் கொண்டு செல்லும் உந்து சக்திகளாகும்.
அதே நேரம் நாளுக்கு நாள் மாறிவரும் நாகரீக வளர்ச்சிகளின் நடுவே, நாம் தொலைத்துவிட்ட சிலவற்றையும் வாழ்க்கையில் அநேக இடங்களில் ஆக்கிரமிக்கும் வெற்றிடங்களின் இருப்பையும் இத்தகைய ஓவியங்கள் எடுத்துரைக்கின்றன. இவைகளின் மீது அவ்வப்போது நமக்கும் ஏற்படுகின்ற ஆர்வம் ஒரு அலாதியானது என்றே சொல்லலாம். மொபைல்களின் வசம் தங்களது நம்பிக்’கை’யை ஒப்படைக்கும் தற்போதைய இளைய தலைமுறையினருக்கு இத்தகைய ஓவியங்கள் எடுத்துரைக்கும் யதார்த்தமான உண்மைகள் எங்கு தேடியும் கிடைக்காதவை எனலாம்.
இத்தகைய நவீன ஓவியங்களின் வழியே பொதுமக்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் எனவும் இவற்றின் மூலம் அந்த ஓவியக்கலையின் உன்னதத்தையும் அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் எனவும் இந்த மாணவர்கள் உணர்த்தியுள்ளனர். வாழ்க்கையில் மனித சமூகத்தின் மனதில் பதிந்த எண்ணங்களையெல்லாம் இவ்வாறு நேர்த்தியாக வரைந்த காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நுண் கலைத்துறை மாணவர்களுக்கு வாழ்க்கையில் அடையப் போகும் வெற்றிகளுக்குப் பல தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வேலூர் நாட்டிய சங்கமம் 2023: மாணவி பிரணவதிக்கு முதல் பரிசான ரூ.1 லட்சம் மதிப்புள்ள 'வைரம்'