மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரரும் தனியார் திருமண தகவல் மைய உரிமையாளருமாக உள்ளார். இவர் தீவிர ரஜினி காந்த்தின் ரசிகர். இவர் ரஜினியை ஒரு முறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்பதையே தனது வாழ்நாள் ஆசையாகக் கொண்டுள்ளார்.
இவர், திருமங்கலம் கூழையாபுரம் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தின் ஒரு பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த்திற்கு 250 கிலோ எடை கொண்ட கருங்கல் சிலை வைத்து கோயில் அமைத்தார். அதனைத் தொடர்ந்து, தினந்தோறும் அபிஷேக ஆராதனை நடத்தி வந்த நிலையில் ரஜினிகாந்த் பிறந்த நாளான 12.12.2023 அன்று ரஜினி சிலைக்குக் கோவில் கருவறையில் வைப்பது போலத் திருவாச்சி அமைத்துச் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
இந்த நிலையில், ராணுவ வீரரும் தனியார் திருமண தகவல் மைய உரிமையாளருமான கார்த்திக் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று (ஜனவரி 14) ரஜினிக்காகக் கட்டப்பட்ட கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தனது ஊழியர்களுடன் பொங்கல் விழாவினை கொண்டாடினார்.
அரிசி காய்கறிகள், தேங்காய், பழம் என அனைத்தையும் சிலை முன் இலையில் வைத்துப் பொங்கல் படையலிட்டுச் சிறப்பு ஆராதனை செய்தார். இதனை அடுத்து, பின்னர் ரஜினி கோயிலில் வைக்கப்பட்ட பொங்கலை அனைவருக்கும் பகிர்ந்து அளித்துப் பொங்கல் விழாவைக் கொண்டாடினார்.
இது குறித்து கார்த்திக் கூறுகையில், "வீட்டில் உள்ளவர்களுடன் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். கடந்த அக்டோபர் 26ஆம் தேதி ரஜினிக்குச் சிலை வைத்து அவரை சாமியாக நினைத்து வழிபட்டு வருகிறோம். இந்த நிலையில், ரஜினி சிலை முன் பொங்கல் வைத்து அனைவருக்கும் பொங்கலை வழங்கி வருகிறோம். பொங்கல் கொண்டாடும் அனைவருக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்.
அதேபோல், எங்கள் சார்பில் ரஜினி மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், தொடர்ந்து ரஜினிகாந்த்திடம் இருந்து அழைப்பு வரும் வரை அவரது கவனத்தை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை; ஆரணி உழவர் சந்தையில் 32 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை!