மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் தினமும் எழுந்தருளி கோயில் உள் பிரகாரத்தில் இருந்து மேளதாளம் முழங்க புறப்பட்டு பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் முன்பாக வந்தடையம். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, வசந்த மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகர் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தேவியர்களுக்கும், சிறப்பு பூஜைகளும் தீபாராதனை நடைபெறும்.
இந்த வசந்த விழாவின் முக்கிய நிகழ்வாக சூர்ணோற்சவம் என்று அழைக்கப்படும் மஞ்சள் நீராட்டு விழா ஏழாம் நாள் விழாவாக நேற்று நடைபெற்றது.
இதற்காக கள்ளழகர் மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளி ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் சமதேமாக தெற்குப் பிரகாரத்தில் அலங்காரம் செய்யப்பட்டு, யோக நரசிம்மர் சன்னதி வழியாக பல்லாக்கில் புறப்பட்டு வசந்த உற்சவ மண்டபத்திற்கு வந்தடைந்தனர்.
அங்கு சூர்ணோற்சவம் என்று அழைக்கப்படும் மஞ்சள் நீராட்டு விழாவிற்கான பூஜைகள் , சிறப்பு ஆராதனைகள் கள்ளழகருக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உள்பட்டு அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பூஜைகளில் கலந்துகொண்டனர்.
வரும் ஐந்தாம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில், தினந்தோரும் வசந்த உற்சவம் மண்டபத்தில் சுவாமி, அம்பாள்கள் எழுந்தருளி அருள்பாலிப்பார். இந்த விழாவை தக்கார் வெங்கடாசலம், கோயில் நிர்வாக அலுவலர் அனிதா உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்தனர்.