தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பால் கல்வி, சுற்றுலா உள்பட பல்வேறு மாநிலம் சென்றிருந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்துவந்தனர். இந்நிலையில், பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிக்கித் தவித்து வந்த மதுரையைச் சேர்ந்த 73 நபர்கள் சிறப்பு ரயில் மூலம் நேற்று திருச்சி வந்தடைந்தனர். அங்கிருந்து அரசு பேருந்து மூலம் அழைத்துவரப்பட்ட அவர்கள், மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான தலையணைகள், இதர அத்தியாவசியப் பொருள்கள் மாவட்ட நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 73 நபர்களுக்கு கரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை மேற்கொள்ளப்படும், இதில் வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் தனியார் கல்லூரிலேயே 14 நாட்கள் தங்கவைக்கப்படுவார்கள் என்றும், மற்றவர்கள் தங்களது வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: 10 மாநிலங்களில் புதிதாக யாருக்கும் கரோனா இல்லை - ஹர்ஷ் வர்தன்