ஜவுளிக்கடை மாடியிலிருந்து தவறி விழுந்து சிறுவன் - படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி - மதுரை மாவட்ட செய்திகள்
மதுரையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை மாடியில் இருந்து தவறி விழுந்த 7 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை: வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் தனது மனைவி மற்றும் 7 வயது மகன் நித்திஸ் தீனாவுடன் இன்று (நவ.2) மதுரை அழகப்பன் நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஜவுளிக்கடைக்கு தீபாவளி பண்டிகைக்காக துணி எடுக்கச் சென்றனர்.
துணிகளை வாங்கி விட்டு, ஐந்தாவது மாடியிலிருந்து எஸ்கலேட்டர் வழியாக இறங்க முயன்றபோது சிறுவன் நித்திஸ் தீனா, எஸ்கலேட்டர் அருகில் உள்ள இடைவெளி வழியாக திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது.
பின்னர் சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடையில் இருந்த எஸ்கலேட்டர் அருகில் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த கண்ணாடித் தடுப்புகள், உரிய முறையில் இல்லாதது விபத்திற்குக் காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே அவசர அவரசரமாக சம்பவம் நடைபெற்றதற்கான ரத்த அடையாளங்களை ஊழியர்கள் நீர் ஊற்றி அழித்ததால் காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தொழில் அதிபர் கடத்தல் விவகாரம்: 6 காவலர்களை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவு