ஏழு தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில், நாம் தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பாக ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
அப்போது, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எழுவர் விடுதலையை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தார். அதனடிப்படையில் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக அவர்களை விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அத்தீர்மானத்தை அவர் மதிக்கவில்லை.
தற்போது பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏழு தமிழர் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இரண்டு வாரத்திற்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும். ஏற்கனவே, ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில் உடனடியாக தமிழ்நாடு அரசு ஆவணங்களைத் தாக்கல் செய்து ஏழு பேரின் விடுதலைக்கு முயற்சி செய்ய வேண்டும். தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றுவரும் நிலையில், ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு இல்லையேல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்த ஏழு தமிழர்களுக்கும் நீண்ட கால விடுப்பு அளித்து விடுவிக்க வேண்டும்" என்றார். பிறகு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து பேருந்துகளில் அழைத்துச் சென்றனர்.