கரோனா நோய் தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்குச் சென்றுள்ள அனைவரையும் அழைத்து வர விமானங்கள் செல்லவிருக்கின்றன. மேலும் மற்ற மாநிலங்களில் உள்ள தமிழர்களையும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறன்றன.
இதனால் வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து மதுரைக்கு வருபவர்களை தனிமைப்படுத்துவதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், 400 படுக்கை வசதிகளுடன் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் தயாராகி வருகிறது.
இதுகுறித்து அப்பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறுகையில், “மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதி, ஆண்கள் விடுதி, சமையல் செய்வதற்கான இடம், மூன்று சுற்றுலா மாளிகைகள் ஆகியவை தனிமைப்படுத்தும் இடமாக மாற்றப்பட்டு வருகின்றன. அதன்படி 400 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் இரண்டு நாள்களில் ஒப்படைக்கப்படும். பல்கலைக்கழகம் மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது.
திடீரென 144 தடை உத்தரவு போடப்பட்டதால் மாணவர்கள் தங்களது பொருள்களை விடுதியில் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். மாணவர்களின் பொருள்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தப்படும்போது, முழுவதுமாக கேமராவில் பதிவு செய்யப்படும். அவர்களின் பொருள்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும்” என்றார்.