இதுகுறித்து மதுரை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மனித உயிருக்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் குற்றங்களில், கடந்த 2019ஆம் ஆண்டில் 44 கொலை வழக்குகளும் 2020ஆம் ஆண்டில் 40 கொலை வழக்குகளும், கடந்த 2019இல் 71 கொலை முயற்சி வழக்குகளும், 2020இல் 58 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் கடந்த 2019ஆம் ஆண்டு 335 காய வழக்குகளும், 2020ஆம் ஆண்டு 325 காய வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெண்களுக்கு எதிரான பாலியல் வண்கொடுமை வழக்குகளைப் பொருத்தவரை கடந்த 2019இல் 61 வழக்குகளும் 2020இல் 52 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று திருட்டு வழக்குகளில் கடந்த 2019ஆம் ஆண்டு 127 கொள்ளை வழக்குகளும் 2020ல் 98 கொள்ளை வழக்குகளும் பதிவாகியுள்ளன. இவற்றில் 30 செயின் பறிப்பு, 6 செல்போன் பறிப்பு வழக்குகளும், மூன்று கொள்ளை முயற்சி வழக்குகள் போக மற்ற 59 வழக்குகள் கொள்ளை வழக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு 136 வழிப்பறி வழக்குகளும் 2020ஆம் ஆண்டு 83 வழிப்பறி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019இல் 447 திருட்டு வழக்குகளும் 2020இல் 301 திருட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டை விட 2020ல் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவதற்கு மதுரை மாநகர காவல் துறையினர் எடுத்த தீவிர நடவடிக்கைகளே காரணம்.
ரவுடிகள், சந்தேக நபர்கள் மற்றும் பழங்குற்றவாளிகள் மற்றும் பழங்குற்றவாளிகள் மீது 109 பிரிவின்படி 719 நபர்கள் மீதும் 110 பிரிவின் கீழ் 1329 நபர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன. மேலும் மேற்கூறிய நபர்களின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்ததின் பேரிலும், புகார் மனுக்கள் மீதான விசாரணை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தீவிரப் படுத்தப் பட்டன.
புகார்கள் வந்த நாளே புகார் அளித்தவர் விலாசத்திற்கு சென்று விசாரித்து தீர்வு தந்ததின் பேரிலும் அவ்வாறு முடிவடையாத புகார் மனுக்களை ஒவ்வொரு வாரமும் அந்தந்த சரகத்தில் மொத்தமாக புகார் மனுதாரர்களை வரவழைத்து காவல் உதவி ஆணையர் தலைமையில் விசாரித்துதீர்வு காணும் நடைமுறையை பின்பற்றியதின் பேரில் குற்றங்கள் 2019 ஆம் வருடத்தை விட 2020ஆம் வருடம் வெகுவாக குறைந்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.