மதுரை பைக்காரா இ.பி. காலனி பகுதியில் முருகன் - காளிஸ்வரி தம்பதியர் குடும்பத்துடன் வசித்துவருகின்றனர். முருகன், வாடிப்பட்டி அருகே தனியார் டிராக்டர் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார்.
இந்நிலையில், நேற்று (பிப். 4) மதியம் முருகனின் மனைவி காளிஸ்வரி தனது குழந்தைகளை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்துவருவதற்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றார்.
திரும்பிவந்து பார்த்தபொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பொருள்கள் அனைத்தும் கலைந்த நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்பு பீரோவில் வைத்திருந்த 150 பவுன் தங்க நகை, 6 லட்சம் ரூபாய் கொள்ளைபோனது தெரியவந்தது.
உடனே சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், மோப்ப நாய், கைரேகை வல்லுநர்களின் உதவியோடு தடயங்களைச் சேகரித்தனர்.
கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தாலியை கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் மாயம்!