திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள சின்னகலையம்புத்தூரைச் சேர்ந்த சேதுபதி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "நானும் எனது மனைவியும் இப்பகுதியிலுள்ள மில் ஒன்றில் வேலை செய்து வருகிறோம். எனக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். 13 வயதாகும் எனது மகன் மோகன் குமார் ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலே தங்கியிருந்தான். கடந்த 24ஆம் தேதி நாங்கள் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், வெளியில் சென்ற எனது மகன் வீடு திரும்பவில்லை என மூத்த மகள் எங்களுக்குத் தகவலளித்தார்.
உடனடியாக நானும் எனது மனைவியும் வீடு திரும்பி அவனை பல இடங்களில் தேடினோம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் காலையில் அவன், அருகே உள்ள சிட்டிபாபு என்பவரது வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அவனின் உடலில் கழுத்து உட்பட பல இடங்களில் காயம் இருந்தது. அவனது கையில் ஒரு புது பிளேடு வைக்கப்பட்டிருந்தது. அவன் மின்சாரம் தாக்கியது போல் எரிந்த நிலையிலும் கிடந்தான். இதுகுறித்து, நாங்கள் பழனி தாலுகா அலுவலக காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.
பின்னர் இச்சம்பவம் குறித்து நாங்கள் விசாரிக்கையில், சிட்டிபாபுவும் அவனது பெற்றோரும் எங்களது மகனை காலையிலிருந்து வேலை வாங்கியதும், இரவு அவனுக்கு உணவளித்துவிட்டு மீண்டும் வேலை செய்யச் சொல்லி துன்புறுத்தியதும் தெரிய வந்தது.
அவன் வேலை செய்யாததால் சிட்டிபாபுவும், அவனது பெற்றோரும் எனது மகனைத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவனை தூக்கிச் சென்று வீட்டின் மாடியிலிருந்து கீழே தள்ளியுள்ளனர். இதில் எனது மகன் உயிரிழந்துள்ளான். அதன் பின்னர் அவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது போன்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர்.
இது குறித்து பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்து, கொலை வழக்காகப் பதிவு செய்ய கூறிய போது அங்கிருந்த காவல் ஆய்வாளர், சந்தேக மரணம் என மட்டுமே வழக்கைப் பதிவு செய்துள்ளார். எனவே இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றியும், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியும் உத்தரவிட வேண்டும்.
அதுமட்டுமின்றி, எனது மகனின் உடலை மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு மீண்டும் உடற்கூறாய்வு செய்து, அதனைக் காணொலியாக பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்" எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு இன்று (ஆக. 13) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் சிறுவனின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
மேலும், அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதி, வழக்கு விசாரணை குறித்து, பழனி காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் செப்டம்பர் மூன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.