மதுரை: மதுரையில் உள்ள தனியார் மீன் விற்பனை மையம் ஒன்று ரூ. 500-க்கு மேல் மீன் வாங்குபவர்களுக்கு, 100 ரூபாய் பெறுமானமுள்ள பெட்ரோல் கூப்பன் வழங்கி, பொது மக்களை ஈர்த்து வருகிறது.
இன்று (ஆகஸ்ட் 1) ஞாயிற்றுக்கிழமை என்பதால், பொதுமக்கள் அதிகம் அசைவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அதன் அடிப்படையில் கடந்த மூன்று நாட்களாக மதுரை நகர் முழுவதும் மீன் வாங்கினால், பெட்ரோல் இலவசம் என்று ஒட்டப்பட்ட சுவரொட்டி தற்போது பொது மக்களை ஈர்த்தது.
500-க்கு மீன்... 100-க்கு பெட்ரோல்
மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் கடை நடத்திவரும் பிஎஸ்ஏ குழுவினர், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இதுபோன்ற அறிவிப்பை செய்து பொதுமக்களிடம் மீன்களை விற்பனை செய்து வருகிறது.
அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 1) சொக்கிக்குளம் பகுதியில் உள்ள மீன் கடையில் ரூ.500-க்கு மீன் வாங்கினால் ரூ.100 மதிப்புள்ள பெட்ரோல் கூப்பன் இலவசமாக வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதி பொது மக்களும் ஆர்வத்துடன் மீன் வாங்கிச் சென்றனர்.
எங்களுக்கு மகிழ்ச்சி
இதுகுறித்து வாடிக்கையாளர் மீனாட்சி கூறுகையில், 'கரோனா காலமான இந்நேரத்தில் வருமானம் குறைந்துள்ளது.
தற்போது பெட்ரோல், டீசல் விலை நூறு ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகும் நிலையில், மீன் கடை நிறுவனத்தினர் அறிவித்துள்ள இந்த அறிவிப்பு எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
இலவச பெட்ரோல் வழங்குவதால் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் வழக்கமாக இங்கே வாங்கி வருகிறோம். அதே விலையில் தான் விற்பனை செய்கின்றனர். மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.
பெட்ரோல் விலை உயர்வை மனதில் கொண்டு
இதனைத்தொடர்ந்து மீன்கடை ஊழியர் கூறியதாவது, 'கரோனா காலங்களில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எங்களிடம் தொடர் வாடிக்கையாளராக உள்ளவர்களுக்கு உதவும் வகையிலும் பெட்ரோல் விலை உயர்வை மனதில் கொண்டும், அவர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும் இந்த இலவச பெட்ரோலை வழங்கி வருகிறோம். பொது மக்களும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: சம்பளப்பணம் வரவு செய்யப்படும்? - ஐசிஐசிஐ அதிரடி