ஓசூர் அருகே பேடரப்பள்ளி பாரதியார் நகரைச் சேர்ந்த கோழி இறைச்சிக்கடை நடத்தி வரும் ராமு என்பவரின் மகன் சபரிநாதன்(20). இவர் ஓசூர் முதல் சிப்காட் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. நேற்று நண்பர் வீட்டிற்கு செல்வதாக கூறி சாமிநாதன் அருகில் உள்ள பேடரப்பள்ளி ஏரிக்கு, தெர்மாக்கோலை எடுத்துச் சென்றுள்ளார். அங்கு நீண்ட நேரம் பரிசல் இயக்குவதை போல் அவர் விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது.
நீச்சல் தெரியாத சபரிநாதன் நடு ஏரியில் இருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். சில நிமிடங்களுக்கு பிறகு தெர்மாகோல் மட்டும் மிதந்ததுள்ளது. இதனால், சபரிநாதன் ஏரியில் மூழ்கி இருக்கலாம் என்று சந்தேகித்த அப்பகுதி மக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், சபரிநாதனை தேடும் பணியில் நேற்று இரவு வரை ஈடுபட்டனர். இரவில் தேட முடியாதென்பதால் தேடுதல் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சபரிநாதனை தேடும் பணி இன்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது. அப்போது, சபரிநாதன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த சிப்காட் காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நீச்சல் தெரியாத இளைஞர் ஏரியில் மூழ்கி, உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.