ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி சப்பளம்மா கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று(பிப்.22) பாரம்பரிய எருது விடும் விழா நடைபெற்றது. இதில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், பேரிகை, பாகலூர், உத்தனப்பள்ளி, சூளகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காளைகள் அழித்துவிடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளைக் காளையர்கள் உற்சாகமாக அடக்கினர். களைக்கட்டிய இந்த எருது விடும் விழாவை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
எருது விடும் விழாவைப் பார்த்துக் கொண்டிருந்த ஆரோப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சு (25) என்ற இளைஞரை மாடு முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
அதேபோல் இந்த எருது விடும் விழாவில் பங்கேற்ற தங்கவேல் (22), யஸ்வந்த் (19), சுதாகர் (19), சந்தோஷ் (27), உசேன் (18), தமிழ் (22) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி!