கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிப் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஓசூர் நகர காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. மேலும், குட்கா பொருட்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களைப் பிடிக்க, ஓசூர் நகர காவல் துறையினர் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், ஓசூர் ராம்நகர் கட்டடம் ஒன்றில் குட்கா பொருட்களை இருவர் பதுக்கி வருவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்த தனிப்படையினர், குடோனில் குட்கா பொருட்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த இருவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
விசாரணையில் இவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் மளிகைக் கடையில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. மேலும், பல்ராம், தீபாராம் ஆகிய இருவரை கைது செய்த காவல் துறையினர், அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், குட்கா பொருட்களை விற்பனை செய்துவந்த மளிகைக்கடையின் உரிமையாளர் கோபால் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க : கள்ளநோட்டு அடிப்பதில் கில்லாடியான அசாமிலுள்ள ஓர் மாவட்டம்: 24 பேரைக் கைது செய்த காவல்துறை!