கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கொண்டப்பநாயனப்பள்ளி கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் நஷீர் அகமத் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராம கவுண்டர், கிளை சங்கத் தலைவர் பாலச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் கலந்துகொண்டு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து விளக்க உரை ஆற்றினார்கள்.
மேலும் இந்தக் கூட்டத்தின்போது கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கொண்டப்பநாயனப்பள்ளி, அதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும். ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொண்ட இந்தக் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் அமைக்கப்பட வேண்டும், வாணி ஒட்டு அணைத் திட்டத்தினை நிறைவேற்றி படேதால்வாய் ஏரி வழியாக கொண்டப்பநாயனப்பள்ளி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும் விவசாய விளை பொருள்களுக்கு சுங்கச்சாவடியில் கண்டன விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் ராம கவுண்டர், ”கொண்டப்பநாயனப்பள்ளி பகுதிகளில் இயங்கும் ஜல்லி கிரஷர்களிலிருந்து வெளியேறும் தூசி, தூள்களினால் மா, நெல், ராகி உள்ளிட்ட எந்த பயிர்களும் சாகுபடி செய்ய முடியவில்லை. அது மட்டுமின்றி காட்டுப்பன்றி, குரங்குகளால் விவசாயம் மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஜல்லி கிரஷர்களை அகற்றியதோடு, வனவிலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
இதையும் படிங்க: கூண்டில் சிக்காமல் டிமிக்கி கொடுக்கம் சிறுத்தை - அச்சத்தில் மக்கள்!