கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கீழ்மத்தூர் அண்ணாநகரைச் சேர்ந்த அனில் குமார் மகன் திலிப்குமார் (வயது 14) காரப்பட்டு அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். அதே பகுதியைச் சேர்ந்த சதாசிவம் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 13) கீழ்மத்தூர் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார். இரு சிறுவர்களும் ஊருக்கு அருகே உள்ள மகுண்டம் மலையில் புரட்டாசி சனி விசேஷத்தை முன்னிட்டு சாமி கும்பிட சென்றனர். பின்பு இருவரும் வீடு திரும்புகையில் மலை அடிவாரத்தில் உள்ள கீழ்மத்தூர் கானாறு ஏரியில் குளித்தனர்.
குளித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராவிதமாக திலிப்குமார் குட்டையில் உள்ள சேற்றில் சிக்கிக் கொண்டார். அவரைக் காப்பாற்ற சென்ற மணிகண்டனும் துரதிர்ஷ்டவசமாக சேற்றில் மூழ்க இருவரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்த பெற்றோர்கள் பொதுமக்கள் உதவியுடன் இரு சிறுவர்களின் உடல்களையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பியுள்ளனர். சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இறந்த சம்பவம் அக்கிராமத்து மக்களிடையே மீளா முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரத்தில் மட்டும் ஊத்தங்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏழு சிறுவர், சிறுமியர்கள் ஏரி குட்டைகளில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நடந்திருப்பதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
இதையும் படிங்க: தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவிகள் மரணம்!