கிருஷ்ணகிரி அருகே உள்ள பாறைகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (23), கோவிந்தராஜ் (23) ஆகிய இருவரும் ராணுவத்தில் பணியாற்றினர். ராணுவ வீரர்களான இருவரும் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துள்ள நிலையில், இன்று (டிசம்பர் 27) இருசக்கர வாகனத்தில் சின்னமுத்தூர் இணைப்பு சாலை அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் இருவரும் வேகமாக தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். வேகமாக தூக்கி வீசப்பட்டதில் இருவரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த காவல் துறையின்ர் இருவரின் உடலையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளாக்கிவிட்டு தப்பியோடிய ஓட்டுநர் மற்றும் வாகனம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரசாந்த் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்தார். கோவிந்தராஜ் தற்போது தான் பெங்களூருவில் ராணுவ பயிற்சி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.