தமிழ்நாடு - கர்நாடக எல்லையான ஓசூரில் ஜுஜுவாடி என்ற இடத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு எல்லைக்குள் நுழையும் வாகனங்கள சோதனையிடவும், தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்களை சோதனையிடவும், தற்காலிக அனுமதி வழங்க சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே இரு மாநிலங்களுக்கு இடையே அதிகபட்சமான வாகனங்கள் இடம் பெயரும், இந்த சோதனைச் சாவடி வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், இந்த சோதனைச் சாவடி வழியே போட்டிபோட்டுக் கொண்டு லஞ்சம் வாங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வந்தது. மேலும், அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதற்கு வாகனங்களை நிறுத்தி பிடித்துத் தருபவர்களுக்கு புரோக்கர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன், காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் ஒரு குழுவினர் இன்று (அக்.17) அதிகாலை ஓசூர் சோதனைச் சாவடிக்கு வந்தனர்.
அப்போது நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத இரண்டு லட்சத்து 14 ஆயிரத்து 120 ரூபாய் சோதனைச்சாவடி அலுவலக மேஜைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரவு பணிக்கு வந்த சில மணி நேரங்களில் இந்த சோதனைச் சாவடியில் இருந்த ஆர்டிஓ அலுவலர்கள், ஊழியர்கள் வாங்கியுள்ள லஞ்சப் பணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சோதனைச் சாவடி பணியில் இருந்த மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் சுப்புரத்தினம் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.