கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவரது மகன் அபின். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, பெங்களூரில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி சேலம் பகுதியில் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, வாகன தணிக்கையில் அபின், ஆகாஷ் உள்ளிட்ட ஆறு பேரை சேலம் பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர். அபினை வழக்கில் இருந்து விடுவிக்க பிரதீப், ஓசூரை சேர்ந்த காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவரான சந்திரசேகரை நாடியுள்ளார்.
இதையடுத்து சந்திரசேகர், சேலத்தில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் சரவணனை தொடர்புகொண்டு அபினை விடுவிக்க உதவுமாறு தெரிவித்தார். அதன்பேரில் பிரதீப்பிடம் இருந்து முதல் தவணையாக ரூ.4 லட்சமும், இரண்டாவது தவணையாக ரூ.2 லட்சம் பணத்தை இவர்கள் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அபினை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியது தொடர்பாக பிரதீப் கொடுத்த புகாரின் பேரில், மோசடி செய்ததாக காங்கிரஸ் பிரமுகர்கள் சந்திரசேகர், சரவணன் ஆகியோரை பள்ளப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: விவசாயிகள் பாரத் பந்த் ஆதரவாகத் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்