கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி லாரியில் வந்துள்ளார்.
அப்போது கிருஷ்ணகிரி சுங்கச் சாவடியில் பணியாற்றும் பர்கூரைச் சேர்ந்த செண்பகவல்லி என்பவர் இவரது வாகனத்தை நிறுத்தி, சுங்கக் கட்டணம் வசூலிக்கும்போது, இவர் வாகனத்தில் ஒட்டப்பட்டு இருந்த பாஸ் டேக் கணக்கில் பணம் இல்லாதது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து செண்பகவல்லி பாஸ்டேக் கணக்கில் இல்லாததை அசோக்கிடம் தெரிவிக்க, அவர் தனது ஏடிஎம் கார்டை கொடுத்து பணத்தை எடுத்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.
பின்னர் ஏடிஎம் ரகசிய எண்ணை பதிவு செய்ய ஸ்வைப்பிங் மெஷினை வாங்கிய அசோக், ரகசிய எண்ணைப் பதிவு செய்யாமல் கால தாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த செண்பகவல்லி அசோக்கை கோபமாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த செண்பகவல்லி தனது கையில் இருந்த மெஷினால் ஓட்டுனர் அசோக்கின் தலையில் தாக்கியுள்ளார். இதில் அசோக் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து காயமடைந்த அசோக் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி சிகிச்சைப் பெற்றார். அதற்குள் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்து, மற்ற ஓட்டுநர்கள் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முற்பட்டனர் .
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரையும் புகார் அளிக்குமாறு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பெண் பயணியை தாக்கிய ஊபர் ஆட்டோ ஓட்டுநர் கைது