கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். கிராம நிர்வாக அலுவலரான இவர், ராஜா என்ற ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வந்தார். இந்த ஜல்லிக்கட்டுக் காளை கடந்த சனிக்கிழமை லோகேஷ் என்ற இளைஞரால் துன்புறுத்தப்பட்டு கொம்புகள் உடைந்து ரத்தம் கசிந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது.
இந்நிலையில், இதன் உரிமையாளர் வெற்றிவேல் இறந்த காளையை அப்பகுதியில் அடக்கம் செய்தார். இதனைத் தொடர்ந்து காளையைத் துன்புறுத்திக் கொலை செய்யும் வீடியோ டிக் டாக்கில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குனர் தாமாக முன்வந்து புகார் கொடுத்ததன் பேரில், நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, பாப்பாரப்பட்டி பகுதியில் கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் பொறுப்பு கணேஷ் குமார் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் அருள்ராஜ் மரியம் சுந்தர் தலைமையில் காளை உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
காளை இறந்தது குறித்த அறிக்கைகள் மாநில தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெறும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வளர்ச்சி குறித்த விவரங்களை அரசு பூட்டி வைத்து கொள்ளுமா? - ப.சிதம்பரம் கேள்வி