கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பணியாளர் ஒருவர் அவரை மருத்துவரிடம் காண்பித்துவிட்டு படுக்கைக்கு அழைத்துவருவது வழக்கம். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 15) அவரை மருத்துவரிடம் காண்பித்துவிட்டு படுக்கைக்கு கொண்டுவரும் மருத்துவ பணியாளர், அவரை வீல்சேரில் இருந்து கீழே தள்ளி விடுகிறார். இதனை அங்குள்ளவர்கள் படம்பிடித்துள்ளனர்.
அதில், மருத்துவ பணியாளர் நோயாளியை பார்த்து ’சக்கர நாற்காலியை விட்டு இறங்குடா, நான் உன்னை தொடமாட்டேன்; உனக்கு என்ன வியாதி இருக்கும்னு எனக்கு தெரியாது’ எனக்கூறி அவரை கீழே இறங்கச் சொல்கிறார். உடல்நலம் மோசமான நிலையில் இருந்த அந்த மனிதர், சக்கர நாற்காலியை விட்டு இறங்க முயற்சித்தும் முடியாமல் போகவே, மருத்துவ பணியாளர் அவரை அப்படியே தரதரவென இழுத்து கீழே தள்ளுகிறார். இந்தக் காணொலி பார்ப்போர் நெஞ்சில் பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.
அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் இவ்வாறு மனிதத்தன்மையின்றி நடந்துகொள்ளும் இந்த மருத்துவ பணியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இந்தக் காணொலி தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குநரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘சம்பவம் தொடர்பான காணொலியை அனுப்பி வையுங்கள் பார்க்கிறேன்’ என்றார். இது சம்பந்தமாக மேற்கொண்டு பேசவேண்டும் என்றால் மருத்துவமனைக் கண்காணிப்பாளரை அணுகுங்கள் என்று நமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் காணொலி சம்பந்தமாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று அறிய மருத்துவமனை கண்காணிப்பாளரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொள்ள முயற்சித்தும், அவர் அழைப்பை ஏற்கவில்லை என்று செய்தியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மருத்துவ மாணவர்கள் கல்வி கட்டணத்தை ரத்து செய்ய கோரிக்கை!