கிருஷ்ணகிரி: தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பயன்படுத்திய கார் கிருஷ்ணகிரி மெக்கானிக் ஷெட்டில் புதுப்பொலிவு செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கார் தற்போது பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர், MDT 2727 என்ற எண் கொண்ட, 1952ல் அறிமுகப்படுத்தப்பட்ட 'செவர்லட் ஸ்டைல்டைன் டீலக்ஸ்' என்ற கறுப்பு நிற காரை பயன்படுத்தி வந்தார்.
அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜருக்கு தொழிலதிபர் டி.வி. சுந்தரம் இந்த காரை வழங்கினார். இதை பின்னாளில் காமராஜர் தமிழக முதலமைச்சர் ஆன பின்னும் இந்த செவர்லட் ஸ்டைல்டைன் டீலக்ஸ் காரையே பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் 1963ஆம் ஆண்டு காமராஜர் மறைந்தார். அவரது மறைவுக்குப் பின், சென்னை காமராஜர் அரங்கத்தில் இந்த செவர்லட் ஸ்டைல்டைன் டீலக்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காமராஜர் பயன்படுத்திய செவர்லட் ஸ்டைல்டைன் டீலக்ஸ் காரை புதுப்பிக்கப்பட வேண்டும் என ஆலோசித்து உள்ளனர். மேலும், இந்த கார் காமராஜரின் பிறந்த நாளான வருகின்ற ஜூலை 15ஆம் தேதி அன்று காமராஜர் அரங்கில் புதுப்பிக்கப்பட்டு, நிறுத்த வேண்டும் எனவும் ஆலோசித்து உள்ளனர். இதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டார்க் மேக்ஸ் என்ற கார் மெக்கானிக் ஷெட்டில் புதுப்பொலிவு செய்யப்பட்டது. மேலும் புதுப் பொலிவுடன் மின்னும் இந்த கார் பொதுமக்கள் பார்வைக்காக காமராஜர் அரங்கில் நிறுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து காமராஜரின் காரை நவீனப்படுத்திய ஷெட் உரிமையாளர் அஷ்வின் ராஜ் வர்மா, ''என் தாத்தா முனுசாமி, முன்னாள் முதலமைச்சர் காமராஜர் காலத்தில் கிருஷ்ணகிரியில் எம்.எல்.ஏவாக இருந்தார். என் தந்தை ராஜேந்திர வர்மா தனியார் பஸ்கள் வைத்து தொழில் நடத்துகிறார். நான் கிருஷ்ணகிரியில் கார்ஷெட் வைத்துள்ளேன். நாங்கள் பாரம்பரியமாக காங்கிரஸ் குடும்பத்தினர் என்ற அடிப்படையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி என்னிடம், காமராஜரின் காரை புதுப்பித்து தருமாறு கேட்டார்.
அதன்படி கடந்த ஜூன் ஒன்றாம் தேதி, சென்னை காமராஜர் அரங்கத்திலிருந்த காரை எடுத்து வந்து கிருஷ்ணகிரியில் புதுப்பொலிவுடன் தயார் செய்துள்ளோம். மேலும், இந்த காருக்காக காரின் கண்ணாடி, ரப்பர் உதிரி பாகங்கள், லைட்டுகள் போன்றவற்றை அமெரிக்காவில் ஆர்டர் செய்து வரவழைத்தோம். அதேபோல சில்வர் பாகங்களை ஜோத்பூர் அரண்மனையில் பழைய கார்களை மறுசீராய்வு செய்யும் நிபுணர் அர்ஜூன் தலைமையிலான குழுவினரால் புதுப்பித்தோம்'' என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், ''புதுப்பொலிவுடன் உள்ள காமராஜரின் காரை தற்போது பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் வந்து கார் அருகில் நின்று புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர். எம்.டி.டி 2727 என்ற இந்த கார் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காமராஜரின் பிறந்த நாளான வரும் 15ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்திற்கு கார் திரும்ப அனுப்பப்பட உள்ளது. அங்கு பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: "பருத்திக்கு நியாயமான விலை இல்லை"... கண்டு கொள்ளாத கவர்மெண்ட் - விவசாயிகள் வேதனை!