கிருஷ்ணகிரி: காற்றுடன் கூடிய மழையால் ஏற்பட்ட சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்க உழவர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
ஒசூர் அருகேயுள்ள பிதிரெட்டி கிராமத்தில் பெங்களூருவைச் சேர்ந்த பூர்ணசந்திராரெட்டி என்பவர் 120 ஏக்கர் பரப்பளவில் பசுமைக் குடில்கள் அமைத்து அலங்கார வகை மலர்களைச் சாகுபடி செய்துவருகிறார்.
இங்கு ரோஜா, டைமன் பாக்யா, அக்லோனியா, அந்தோரியம், கலாசியம், சாக்லன்ஸ், கிராசாந்தம் உள்ளிட்ட பலவகையான அலங்கார மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டுவருகின்றன.
இந்த மலர்கள் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, மும்பை, டெல்லி உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகின்றன. இங்குள்ள அலங்கார மலர்ச் செடிகள் ஒன்று 150 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
இச்சூழலில், ஒசூர், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த காற்றுடன்கூடிய மழை பெய்தது. இந்தக் கனமழை, சூறை காற்றுக்கு உழவர் பூர்ணசந்திராரெட்டியின் இரண்டு பசுமைக் குடில்கள் முற்றிலும் சேதமாகியுள்ளன.
பசுமைக் குடில்களில் வளர்க்கப்பட்டுவந்த பல லட்சம் மதிப்பிலான அலங்கார வகை செடிகளும் சேதமடைந்துள்ளன.
இதுதவிர அப்பகுதியில் உள்ள பல்வேறு உழவர்களின் பசுமைக் குடில்களும் மழையில் சேதமடைந்துள்ளன. இதனால் அப்பகுதி உழவர்கள் கடும் வேதனையடைந்துள்ளனர். சேதமான செடிகளுக்கு அரசு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.